குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் தொடர் கருத்தரங்கம்
கருத்தரங்கம்;
தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறையில் தொடர் கருத்தரங்க நிகழ்வும் பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வாக மார்ச் 18-ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் காந்தியத் தடம் - பயண அனுபவங்கள் ஒரு நாள் கருத்தரங்க நிகழ்வில், மக்கள் சிந்தனைப் பேரவை மாநிலத் தலைவர் பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம், காந்தி தென்னாப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிராகப் போராடிய அறப்போரினைத் தனது பயண அனுபவத்தின் வழி, கருத்துரை வழங்கினார். தொடர்ந்து மார்ச் 19-ஆம் தேதி தமிழ் இலக்கியங்களில் இசை என்ற பொருண்மையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்புரையாளராக தமிழ்ப் பல்கலைக் கழக இசைத்துறை இணைப்பேராசிரியர் செ.கற்பகம் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியத்தில் காணலாகும் இசை பற்றிய செய்திகள் மற்றும் அதன் வகைமைகள் குறித்த தன்மையை எடுத்துரைத்தார். மார்ச்.20 ஆம் தேதி கணினித்தமிழ்ப் பேரவை சார்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கணினியில் தமிழை உள்ளிடுதல் என்ற பொருண்மையில் கல்லூரி முதல்வர் அ.ஜான் பீட்டர், தமிழில் மின் வளங்கள் என்ற பொருண்மையில் கல்லூரி நூலகர் ரா.சங்கரலிங்கம் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினர். இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் சீ.வைஜெயந்திமாலா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் பு.இந்திராகாந்தி, ரெ.ஹேமலதா, சா.பெரியநாயகி, பொ.திராவிட மணி, ரா.தமிழடியான் ஆகியோர் செய்திருந்தனர்.