தஞ்சாவூர் வழியாக திருச்சி - சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை : ரயில்வே பொது மேலாளர் தகவல்

ரயில்வே துறை;

Update: 2025-03-21 17:38 GMT
தஞ்சாவூர் வழியாக திருச்சி - சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்தார்.  தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் - விழுப்புரம் இடையேயான இரட்டை ரயில் பாதை தொடர்பாக ஆய்வு நிலையில் உள்ளது. தஞ்சாவூர் வழியாக திருச்சி - சென்னைக்கு பகல் நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சில ரயில்கள் கும்பமேளாவுக்கு இயக்கப்பட்ட நிலையில், அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. எனவே, இத்தடத்தில் ஏற்கெனவே சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில், கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் மகாமகத்துக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கி, 2026 டிசம்பருக்குள் முடிக்கப்படும். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். பாம்பன் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துவிட்டது. உரிய காலத்தில் தொடக்க விழா நடத்தப்படும்" என ஆர்.என். சிங் கூறினார்.  அப்போது, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News