இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துவது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, கலந்தாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் பிரதிநிதிகளிடையே பேசுகையில்- 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்று 01.01.2025-ஐ தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மனாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அனைத்து துணை வட்டாட்சியர்கள் (தேர்தல்) மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.