குமரி மாவட்டம் தக்கலை போலீசார் வாகன சோதனை நடத்தி குடிபோதையில் பைக்கில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டவர்கள் நேற்று பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி அபராத தொகை கட்ட வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் தக்கலை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி என்பவர் கண்காணிப்பு பணியில் இருந்தார். அப்போது அங்கு நின்ற முளகுமூடு பகுதியை சேர்ந்த ஜோனி ( 35), ஆகில் C32) ஆகியோர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் அபராதம் கட்ட வந்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற உலகத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கண்டித்தனர். ஆனாலும் இருவரும் கேட்கவில்லை. இந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கிங்ஸ்லி இருவரையும் கண்டித்தார். அப்போது ஆத்திரமடைந்தவர்கள் அபராதம் கட்ட வந்தால் இவ்வளவு நேரம் ஆகுமா? என கேட்டு பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கிங்ஸ்லி அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து இன்று அவர்களை கைது செய்தனர். கைதான ஜோனி மற்றும் அகில் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இருவரும் சரித்திர பதிவேடு பட்டியலிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் அகில் மீது மட்டும் சுமார் 10 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.