கோவை: பெண்ணிடம் பஸ்ஸில் செயின் பறிப்பு- இரண்டு பெண்கள் கைது
பெண்ணிடம் பேருந்தில் மூன்று சவரன் தங்கச் சங்கலியை பறித்த இருவர் கைது.;
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஈஸ்வரி (54) என்பவர் கடந்த 11-ம் தேதி தனது மகன் வீட்டிற்குச் செல்வதற்காக பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பேருந்தில் வந்தார். பேருந்திலிருந்து இறங்கும் போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயின் காணாமல் போனது. இதுகுறித்து ஈஸ்வரி பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு பெண்கள் செயினைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் அவர்களைக் கண்டுபிடித்து விசாரித்ததில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா (36) மற்றும் முருகேஸ்வரி (35) என்பது தெரியவந்தது. காவல்துறையினர் இருவரையும் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.