தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் நடைமுறை தொடக்கம் பதிவஞ்சலில் அனுப்ப ஏற்பாடு
தஞ்சாவூர் மாநகராட்சி;
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாநகரில் 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும், 6 அரசு மருத்துவமனைகளும் உள்ளது. இந்த மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும், மருத்துவமனைகளில் இறப்பவர்களின் சான்றிதழ்களும் மாநகராட்சி சார்பில் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் அதற்கான சான்றிதழ் மாநகராட்சி சார்பில் நேரில் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பொதுமக்கள் அலைவதை தடுக்கும் வகையில், விண்ணப்பித்தவுடன் 7 தினங்களுக்குள் அவர்களது சான்றிதழ்கள் பதிவஞ்சலில் வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் புதிய நடைமுறையை வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். அப்போது 30 பேருக்கு பிறப்புச் சான்றிதழ்களை அஞ்சல்துறை ஊழியர்களிடம் மேயர் வழங்கினார். இந்நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.கண்ணன், மாநகர நலஅலுவலர் நமச்சிவாயம், மண்டலக்குழுத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறியது: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்கள் அலுவலகம் வந்து அலையாமல் இருப்பதற்காக புதிய நடைமுறையை தொடங்கியுள்ளோம். விண்ணப்பித்த 7 தினங்களுக்குள் பதிவஞ்சலில் இந்த சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். அதே போல் வரும் ஏப்.1 ஆம் தேதி முதல் சொத்துவரி பெயர் மாற்றம் மாநகராட்சியின் அனைத்து பிற சான்றிதழ்களும் பதிவஞ்சல் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி நடப்பாண்டுக்கான சொத்துவரிவசூலில் முதல்நிலையை நோக்கி பயணித்து வருகிறது. கடந்த மார்ச் 12 -ஆம் தேதி வரை ரூ.23 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், ரூ.20.11 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 92.3 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.