பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் மின்சார வயர்களை சுற்றி முளைத்துள்ள செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை
கோரிக்கை;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளுக்கு மின்சாரம் செல்லும் வயர்களை சுற்றி செடிகள் முளைத்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பேருந்து நிலைய மாடியிலிருந்து சர்வீஸ் வயர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சாரம் செல்லும் வயர்களை சுற்றி செடிகள் முளைத்து வயர்களுடன் பின்னி, பிணைந்துள்ளதால் கடைகளுக்கு வரும் மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் அதை சரிசெய்ய உடனடியாக யாரும் கிடைக்காமல் மறுநாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் குளிர்பானங்கள் மற்றும் பால் விற்பனை செய்யும் கடைக்காரர்களின் பொருட்கள் கெட்டு நட்டத்திற்கு ஆளாகின்றனர். மேலும், நீண்ட நாட்களாக வயர்கள் பராமரிப்பின்றி உள்ளதால் அறுந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மழை பெய்யும் நேரங்களில் கடைகளின் சுவர்களில் மின்கசிவு ஏற்பட்டு ஷாக் அடிக்கிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பேருந்து நிலைய மாடியில் வயர்களை சுற்றிப் படர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தி, அறுந்து விழும் நிலையில் உள்ள வயர்களை புதிதாக மாற்றித்தர வேண்டும் என கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.