கோவை: மின் கடத்தி பெட்டியில் தீ விபத்து !

கோவை ஹோப்ஸ் கல்லூரி சிக்னல், அவிநாசி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த மின் கடத்தி பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2025-03-23 00:59 GMT
கோவை ஹோப்ஸ் கல்லூரி சிக்னல், அவிநாசி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த மின் கடத்தி பெட்டி நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் தீயைக் கண்டதும் அலறியடித்து ஓடினர். கோவை மாநகரில் டிரான்ஸ்பார்மர்களுக்கு பதிலாக பூமிக்கு அடியில் புதைவட மின் வயர்கள் மற்றும் மின் கடத்தி பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஹோப்ஸ் கல்லூரி பெட்ரோல் பங்க் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மின் கடத்தி பெட்டியில் இருந்து நேற்று மாலை திடீரென புகை வரத் தொடங்கியது. இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவ்விடத்தை விட்டு தூரமாக ஓடினர். சிறிது நேரத்தில் பெட்டி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அருகில் இருந்த கடை ஒன்றில் இருந்து தீயணைப்பான் கருவியை எடுத்து வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். சிறிது நேர போராட்டத்திற்குப் பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

Similar News