சேலம் மாநகராட்சி செட்டிச்சாவடி குப்பை கிடங்கு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பையில் இருந்து ஏற்படும் தீயை அணைப்பதற்கு நீர்த்தேக்க தொட்டியை அமைத்து அதன்மூலம் குழாய் இணைத்து தீயை அணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும் செட்டிச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையம் மற்றும் பொருள் மீட்பு மையம் ஆகிய மையங்களை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பயோ சி.என்.ஜி. ஆலை, கட்டிட இடிபாட்டு கழிவுகளை செயலாக்கம் செய்யும் மையம் மற்றும் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் இடங்களையும் பார்வையிட்டனர். பின்னர் அணைமேடு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் முரளிசங்கர், மண்டலக்குழு தலைவர் உமாராணி, செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், திலகா, உதவி செயற்பொறியாளர் எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.