உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை
கொல்லங்குடியில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி கிராமத்தில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தன. இவ்விழாவின் 12ஆம் திருநாள் சின்னக்கொட்டு புலி அம்பலம் வகையறாக்கள் அம்பலம் பிறந்த பெண் மக்கள் மண்டாக படி திருநாளில் 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மூலவர் வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரம் முன்பு பிரதான திருவிளக்கை வைத்து அறக்காவலர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் திருவிளக்கை ஏற்றினர். தொடர்ந்து கோவில் உள் மண்டபம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கு மற்றும் மங்கள பொருட்களை வைத்து கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை துவங்கினர். கோவில் அர்ச்சகர் மந்திரங்கள் கூற தொடர்ந்து 108 போற்றி மந்திரங்கள் காயத்ரி மந்திரங்கள், மகாலட்சுமி மந்திரங்கள் கூறி திருவிளக்கிற்கு குங்குமம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து விளக்கு பூஜை செய்தனர். நிறைவாக திருவிளக்கிற்கு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் குடும்ப நன்மைக்காகவும், புத்திர பாக்கியம், குழந்தை வரம் வேண்டியும், உலக நன்மை வேண்டியும் அம்மனை வழிபாடு செய்தனர்.