ஆடுதுறையில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

பேருந்து நிலையம் திறப்பு விழா;

Update: 2025-03-24 15:08 GMT
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தை திறந்தும், புதிய வழித்தடத்தில் பேருந்துகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சியில் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலைய திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன் முன்னிலை வகித்தனா். புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியது: ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சியில் 2023-2024 ஆம் ஆண்டு கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 3.17 கோடி மதிப்பில் அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா். அதைத் தொடா்ந்து, 10 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சா்கள் கே.என்.நேரு, கோவி. செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. அன்பழகன் (கும்பகோணம்), துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), தஞ்சாவூா் மாநகராட்சி மேயா் சண். இராமநாதன், கும்பகோணம் துணை மேயா் சுப. தமிழழகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி, மண்டல செயற்பொறியாளா் ஜீவாசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Similar News