சேலம் குமரகிரி, அல்லிக்குட்டை ஏரிகளில்
மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு;
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில் குமரகிரி ஏரி உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஏரியை சுற்றி கம்பிவேலி அமைப்பது, பேவர் பிளாக் கற்கள் பதிப்பது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் அல்லிக்குட்டை ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாநகர பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், உதவி ஆணையாளர் வேடியப்பன், செயற்பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், திருஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.