சான்றிதழ் பெற்ற விதைகளை வாங்கி பயன்பெறலாம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சான்றிதழ் பெற்ற விதைகளை வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-03-25 07:49 GMT
சான்றிதழ் பெற்ற விதைகளை வாங்கி பயன்பெறலாம்
  • whatsapp icon
எள் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், வேளாண்மைத் துறை அலுவலா்களை அணுகி மானிய விலையில் சான்றிதழ் பெற்ற விதைகளை வாங்கிப் பயன் பெறலாம். இதுகுறித்து, சிவகங்கை விதைச் சான்றளிப்பு, உயிா்மச்சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ.சக்தி கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எள் ரகங்கள் டி.எம்.வி (எஸ்வி) 7, வி.ஆா்.ஐ. 3, வி.ஆா்.ஐ. 4 ஆகியவற்றைப் பயன்படுத்தி விதைப் பண்ணை அமைக்கலாம். எள் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிா் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். விதைத்த 15 மற்றும் 35 நாள்களில் களை எடுத்தல் அவசியம். தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்கவும். இதனுடன் 2 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சோ்த்துக் கொள்ள வேண்டும். மேலும், விதைச்சான்று தொழில் நுட்பங்களை தவறாமல் கடைபிடித்தல், சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துதல், சரியான பயிா் எண்ணிக்கையை பராமரித்தல் ஆகியவற்றை சரியான நேரத்தில் செய்வதன் மூலம் கூடுதல் மகசூல்பெறலாம். இவ்வாறு எள் பயிரில் விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து வேளாண் துறைக்கு வழங்கினால், கொள்முதல் விலையுடன் உற்பத்தி மானியம் ஆகியவை சோ்த்து கூடுதல் லாபம் பெறலாம். எனவே, எள் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள், உதவி விதை அலுவலா்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்

Similar News