
கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், மரங்களின் வளங்கள் நலிவடையும் வகையிலும் ஆங்காங்கே தேங்கி வரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி களியல் வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் காணப்படும் தொடலிக்காடு மற்றும் ஜீரோ பாயிண்ட் வனப்பகுதிகளில் பொதுமக்கள் விட்டுச் சென்ற நெகிழிப்பைகள், பிளாஸ்டிக், மது பாட்டில்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வன ஊழியர்கள் சேகரித்து அகற்றினார்கள். கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அதிகாரி பிரசாந்த் மேற்பார்வையில் களியல் வனச்சரக அதிகாரி முகைதீன் தலைமையில் இப்பணி நடைபெற்றது. வனத்துறையுடன் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.