
தஞ்சாவூர் அருகே கீழே கிடந்த மின் கம்பியை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் க.நாகராஜன் (76), அரசுத் துறையில் நில அளவையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், செவ்வாய்க்கிழமை காலை ஊராட்சி மன்ற மின் மோட்டார் சுவிட்சை போடுவதற்காகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துவிட்ட இவர், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால், பலத்த காயமடைந்த நாகராஜன் தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.