
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 28-ம் தேதி நடக்கும் 'விற்பனையாளர்கள், கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு. கூட்டத்தில் பயன்பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2024--25 ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தனி நபர் உற்பத்தி பொருட்கள், உற்பத்தியாளர் குழுக்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் போன்ற பொருட்களை நேரடியாக மொத்தக் கொள்முதலாளர்களிடம் விற்பனை செய்வதற்காக மாவட்ட அளவில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, நீலமங்கலம் கூட்டுரோடு, திருமலை திருமண மண்டபத்தில் காலை 10:00 மணியளவில் துவங்கும் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கொள்முதல் செய்பவர்கள், ஏற்றுமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். இதில் கலந்து கொண்டு கொள்முதல் செய்து பயனடைய வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.