
திருக்கோவிலுார் அடுத்த மருதுார் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால் என ஐந்து பாசன கால்வாய்களுக்கு நீர் திருப்பி விடப்படுகிறது. இதன் மூலம் பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணை பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பெருமளவில் சேதமடைந்தது. இதனை புனரமைத்து சீரமைப்பதற்கு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ. 130 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானது. இதேபோல் மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஏற்கனவே உள்ள மூன்று கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்க ஏதுவாக புதிதாக அணைக்கட்டை உருவாக்க ரூ. 75 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. திருக்கோவிலுார் அணைக்கட்டின் மூலம் விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட விவசாயிகள் பெருமளவில் பயனடையும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவதற்கு ஏதுவாக மணலுார்பேட்டையில் புதிதாக அணைக்கட்ட அறிவிப்பு வெளியிட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வரவேற்று திருக்கோவிலுார் மற்றும் மணலுார்பேட்டையில் தி.மு.க., வினர் மற்றும் விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.