
இரணியல் பகுதி வழியாக செல்லும் கால்வாய் தண்ணீர் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திங்கள்சந்தை அடுத்த புது விளை பாலம் அருகே கால்வாய் கரையில் தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி சிறுவர்கள், பொதுமக்கள், வாகனங்கள் கால்வாயில் தவறி விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே கால்வாய் கரையில் தடுப்பு சுவர் கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரு மினி டெம்போ கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த வாகனத்துடன் சேர்த்து 3 வாகனங்கள் இதுவரை கால்வாய்கள் விழுந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு இந்த கால்வாய் கரையில் தடுப்பு சுவர் கட்டி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.