இரணியல் அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (51). நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்த பின் நாகர்கோவில் இருந்து தக்கலை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். தோட்டியோடு ஜங்ஷன் வந்தபோது பரிசேரியில் இருந்து வந்த அரசு பஸ் தேசிய நெடுஞ்சாலையில் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாதிராத விதமாக பைக் மீது அரசு பஸ் மோதியது. இதில் ஜெயக்குமார் பைக் உடன் கீழே விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மனைவி ஹேம்லெட் ஷீஜா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அரசு பஸ் டிரைவர் காப்புக்காடு, மாராயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயின் (44) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.