இரணியல் அருகே உள்ள ஆளுர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி வேணி (47).இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வேணி முறுக்கு சுற்றும் தொழில் செய்து வந்தார். இதற்காக மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி இருந்தார். அதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வேணி மன வருத்தத்தில் இருந்தார். நேற்று காலை நாகராஜன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வேணி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இரவு வீட்டிற்கு நாகராஜன் வந்தபோது வீட்டின் உத்திரத்தில் சேலையில் வேணி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டார். இது குறித்து அவர் இரணியல் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினார். அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், சுய உதவிக் குழுவில் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாத காரணத்தால் தற்கொலை செய்ததாக வேணி எழுதி வைத்திருந்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.