சாதி வன்கொடுமை வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து கூடாது ஆணையத் தலைவர் அறிவுறுத்தல்

ஆலோசனைக் கூட்டம்;

Update: 2025-03-26 16:23 GMT
சாதி வன்கொடுமை வழக்குகளில் அலுவலர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் ச. தமிழ்வாணன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: வன்கொடுமைகளைப் பொருத்தவரையில் மற்ற மாவட்டங்களை விட தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றச்சாட்டுகள் அதிகமாக இல்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட ஒரத்தநாடு பகுதியில் வன்கொடுமை கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரிய வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், காவல் துறைக் கண்காணிப்பாளரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். வன்கொடுமை வழக்குகளில் தீவிரமாக ஆராய்ந்தால்தான் உண்மை நிலை தெரிய வரும். சில வழக்குகள் அரசு அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு வராமல், அவர்களுக்குள் முடித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, வன்கொடுமைகள் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே நிகழ்கின்றன. அதை அரசு அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகளை இன்னும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். இக்கூட்டத்தில் ரூ. 3.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன" என்றார் தமிழ்வாணன். முன்னதாக, கூட்டத்தில் அவர் பேசுகையில், சாதி வன்கொடுமை வழக்குகளில் சிலவற்றை உண்மை இல்லை என முடித்து வைக்கப்படுகிறது. ஆனால், இந்த வழக்குகளில் புகார்தாரர்களை மிரட்டி புகாரைத் திரும்பப் பெற வைப்பது, சமாதானமாகப் போகிறேன் என புகார்தாரரைக் கூறச் சொல்வது போன்றவை நிகழ்கின்றன. எனவே, சாதி வன்கொடுமை வழக்குகளில் அலுவலர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்து முடிக்காமல், சட்டப்படி செய்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்டப்படி குற்றம். ஆணையத்திலிருந்து அனுப்பப்படும் மனுக்களுக்கு பதில் அறிக்கை தாக்கல் தாமதமாக வருகிறது. இதைக் குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்ப அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் அவசியம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் மனித உரிமைக்கு எதிரான செயலாகும்" என்றார் தமிழ்வாணன். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம், ஆணைய உறுப்பினர் சு. ஆனந்தராஜ், பொ. இளஞ்செழியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News