கோவை: டிவி சத்தம் தகராறில் லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை-!
கோவை அருகே டிவி சத்தம் அதிகமாக வைத்து கேட்ட தகராறில் லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.;
கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடையில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவர், டிவி சத்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த ஆறுமுகம், கடையில் உள்ள பொருட்களை மினி லாரி மூலம் வீடுகளுக்கு கொண்டு சென்று சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் கேரளாவைச் சேர்ந்த ஷியாம் என்ற இளைஞரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஷியாம் டிவி-யில் அதிக சத்தம் வைத்து நிகழ்ச்சி பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் எழுந்து சத்தத்தை குறைக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஷியாம், அங்கிருந்த காலி மது பாட்டிலை எடுத்து ஆறுமுகத்தின் தலை மற்றும் மார்பில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த ஆறுமுகம் அலறித் துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் கடையின் உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் விரைந்து வந்து பார்த்தபோது, ஆறுமுகம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஷியாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை 3 மணியளவில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான ஷியாமை போலீசார் தேடி வருகின்றனர். ஷியாம் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.