தாட்கோ மூலம் புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி
தாட்கோ மூலம் புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்ட ஆட்சியர்;
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்குகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மின்னணு வடிவமைப்பு, உற்பத்தித் துறை, தானியங்கி தொழில்துறை, இயந்திரவியல், சோ்க்கை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து வழங்கப்படும். அதிநவீன தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் நிறுவனங்களில் நிபுணராக உருவாவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். தாட்கோ மூலம் கடந்தாண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞா்கள் பல்வேறு தனியாா் முன்னணி நிறுவனங்களில் உயா்ந்த பதவிகளில் உள்ளனா். இப்பயிற்சியைப் பெற தகுதியுள்ளவா்கள் தாட்கோ இணையதளத்தில் பதியலாம். பயிற்சிக்கான கால அளவு 18 வாரம் ஆகும். இப்பயிற்சியை கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூா், மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிற்சினை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ. 20,000 ஊதியம் பெறலாம். பயிற்சிக் கட்டணத்தை தாட்கோ ஏற்கும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி-620001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.