சென்னை: வாகன சோதனையில் போதைப்பொருள் கும்பலை பிடித்த போக்குவரத்து போலீஸார்: காவல் ஆணையர் பாராட்டு
வாகன சோதனையில் போதைப் பொருள் கும்பலை பிடித்த போக்குவரத்து போலீஸாரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.;

சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் போக்குவரத்து போலீஸாரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பாண்டிபஜார் போக்குவரத்து காவல் சிறப்பு எஸ்ஐ ஜான், தலைமைக் காவலர் விஜயசாரதி தலைமையிலான போக்குவரத்து போலீஸார் நேற்று முன்தினம் இரவு தி.நகர், ஜி.என் செட்டி சாலை, வாணி மஹால் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி வாகன ஓட்டியை விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, அவரது வாகனத்தை சோதித்தபோது அதில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸார் வாகனத்தில் இருந்த கோயம்பேடு சூர்யதேஜா (19), திருவள்ளூர் பாடி பகுதி ரத்னபாண்டியன்(19) ஆகியோரை பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, வாகனத் தணிக்கையின்போது துரிதமாக செயல்பட்டு, இருசக்கர வாகனத்தில் போதைப் பொருள் கடத்தி வந்த இருவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ ஜான், தலைமைக் காவலர் விஜயசாரதி ஆகியோரை காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.