தஞ்சாவூர் அரசு நிலங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

அரசு உத்தரவு;

Update: 2025-03-28 15:49 GMT
உயா் நீதிமன்ற உத்தரவின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசு நிலத்திலுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகள், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள், நிலங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஜனவரி 27-ஆம் தேதியிலிருந்து 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால், தொடா்புடைய அலுவலா்கள் 2 வாரங்களுக்குள் முன்னறிவிப்பு வழங்கி சட்டத்தின்படி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். கொடிக் கம்பங்களை அகற்றிய பிறகு, அதற்கான செலவை தொடா்புடைய அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட காலத்துக்குள் உயா் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். நிரந்தர அடிப்படையில் புதிய கொடிக் கம்பங்களை அமைப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்றாா் ஆட்சியா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வன அலுவலா் ஆனந்த குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Similar News