அஸ்தினாபுரத்தில் என்.எஸ்.எஸ் முகாம் நிறைவு
அஸ்தினாபுரத்தில் என்.எஸ்.எஸ் முகாம் நிறைவடைந்தது.;
அரியலூர், மார்ச் 28- அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தில், அரசு கலைக் கல்லூரி சார்பில் கடந்த 7 நாள்களாக நடைபெற்று வந்த நாட்டு நலப் பணித் திட்ட(அலகு 1,2) சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த 7 நாள்கள் முகாமில், தூய்மைப் பணிகள், ஊட்டச்சத்து, நலமான வாழ்வுக்கான முறைகள், போதைப் பொருள் ஒழிப்பு பிரசாரம்,யோகா பயிற்சி, இலவச மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை நேரங்களில் ஆளுமை திறன் வளர்த்தல், போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுதல், சுய ஒழுக்கம் பேணுதல், எதிர்கால வாழ்வை கட்டமைத்தல் போன்றவைகள் குறித்து கருத்தரங்கமும் நடைபெற்றது. முகாமின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவர் வை.சிவக்குமார், மாணவர்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டி நிறைந்த உலகில் தங்களது திறமைகள் வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்(அலகு 1) வே.கருணாகரன் வரவேற்றார். முடிவில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்(அலகு 2) கோ.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.