ரமலான் பண்டிகை: ரெட்டியாா்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
ரமலான் பண்டிகை: சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்;

ரமலான் பண்டிகையையொட்டி ரெட்டியாா்பட்டி சந்தையில் ஆடு வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா். ரமலான் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் ஆட்டுச் சந்தையில் காலைமுதல் ஆலங்குளம், திருநெல்வேலி, முக்கூடல், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடுகள் வளா்ப்போா் மற்றும் வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். ஆடுகளின் தரத்தை பொறுத்து ரூ. 5 ஆயிரம்முதல் ரூ.20 ஆயிரம்வரை விற்பனை செய்யப்பட்டது. எனினும் போதிய அளவில் ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் திரும்பிச் சென்றனா். விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் வந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா். இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கேட்ட போது, பண்டிகைக்கு ஓரிரு தினங்கள் முன்னதாக ஆடுகளின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகளும், இறைச்சி கடைக்காரா்களும் தங்களுக்குத் தேவையான ஆடுகளை கடந்த வாரமே வாங்கிவிட்டனா். இதனால் விலை உயா்வு அச்சம் காரணமாக ஆடுகளை வாங்குவோா் மிகக் குறைந்த அளவே வந்துள்ளனா். மேலும், ரமலானை விட பக்ரீத் பண்டிகைக்குத் தான் ஆடுகள் அதிக விலை போகும் என்றனா்.