
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கடந்த 2019 புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் குறும்பனை முதல் நீரோடி வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் வழக்குகளுக்காக இரணியல், குழித்துறை போன்ற நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் அடிப்படையில் கிள்ளியூரில் ஒரு மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தீர்மானம் கொண்டு வந்தார். இதனை ஏற்ற முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கிள்ளியூரில் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக அமைக்க பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தற்காலிகமாக நீதிமன்றம் அமைக்க மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் மற்றும் முதன்மை குற்றவியல் நீதிபதி பெஞ்சமின் ஆகியோர் நேற்று மிடாலகாட்டில் உள்ள பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு சொந்தமான சமூக நல கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.