திங்கள்நகர் பெண் கவுன்சிலர் பேராட்டம் வாபஸ்

கன்னியாகுமரி;

Update: 2025-03-30 05:45 GMT
திங்கள்நகர் பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சுகன்யா என்பவர் நேற்று முன்தினம் மாலை பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டு காலி குடங்களுடன் வந்த அவர் பேரூராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.  அப்போது அவர் ஆரோக்கியபுரம் சேவியர் தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து  சின்டெக்ஸ் வைத்து சிறு மின் விசை திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.      தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கூறி அலுவலக வாசலிலேயே காலி குடங்களுடன் அமர்ந்திருந்தார்.        தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் எழில் ஆக்னேஸ் ஆகியோர் பேசியும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில்  இரவு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு,  இரவு பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் அவரும் அவருடைய உறவினருடன்  தூங்கினர்.      நேற்று காலை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பேரூராட்சி உறுப்பினருடன்   உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன் மற்றும் உதவி இயக்குநர் ராமலிங்கம் ஆகியோர்   பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் மக்களுக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை  உடனடியாக மாற்றி தருவதாகவும் ஜார்ஜியார்  குருசடி செல்லும் சாலையில் பக்க சுவர் கட்டி காங்கிரீட் அமைத்து தருவதாகவும்    உறுதியளித்தனர். இருப்பினும் தொடர் போராட்டமே நீடித்து வந்தது.  பின்னர்  சட்ட மன்ற உறுப்பினர் ஜே. ஜி பிரின்ஸ்   போராட்ட களத்திற்கு வருகை தந்து உயர் அதிகாரிகளிடம் பேசி 15  நாட்களுக்குள்  அனைத்து கோரிக்கையும் சரி செய்து தரப்படும்  என்று உறுதி அளித்ததின் பேரில்  போராட்டம் கைவிடப்பட்டது.

Similar News