கோவை: தொடர் வழிப்பறி, வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது !
கோவையின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

கோவை மாநகரில் சமீபகாலமாக பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இது தொடர்பாக காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இரண்டு நபர்கள் கருப்பு மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து, இருசக்கர வாகனங்களை திருடி, அதன் மூலம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த சபில் மற்றும் சம்வர்தன் ஆகிய இருவர் இந்த குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் சரவணம்பட்டி சத்தி சாலையில், கீரணத்தம் பிரிவில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கி, கால்கள் உடைந்த நிலையில் நேற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபில் மற்றும் சம்வர்தன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் போலீசாரை திசை திருப்ப ரயில்வே டிராக் வழியாக நடந்து வந்து, பல்வேறு தேதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி, பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.