கோவை: செயின் பறிப்பு வழக்கு- கோவையைச் சேர்ந்த இருவர் கைது !
வட்டப்பாறை பகுதியில், பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது.;

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த திவ்யா மேரி என்ற பெண் கடந்த 25-ஆம் தேதி காலை, வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது இரண்டு பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வாளையார் காவல் நிலையத்தில் திவ்யா மேரி புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்டது கோவை பி.என். புதூர் சீரநாயக்கன்பாளையம் அடிகளார் தெருவைச் சேர்ந்த அபிலாஷ் மற்றும் தொண்டாமுத்தூர் குரும்பபாளையம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த தரணி என்பது தெரியவந்தது. அபிலாஷ் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், தரணி மீது போக்சோ வழக்கு ஒன்று உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கேரள மாநிலம் வாளையார் காவல்துறையினர் கோவைக்கு வந்து நேற்று இருவரையும் கைது செய்தனர்.