வாழை இலைகளின் விலை கடுமையாக வீழ்ச்சி!
தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழை இலைகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் வியாபாரிகள் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ;

தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழை இலைகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் வியாபாரிகள் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை விவசாயம் முக்கியமானதாகும் . இங்கு சுமார் 20000 ஏக்கருக்கு மேல் வாழை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏரல், ஆத்தூர், குலையன் கரிசல், அகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்து தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர் தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் வாழை இலைகள் தோட்டத்தில் வெயில் காரணமாக வாடி வருகின்றன. மேலும், பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால் முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழாக்கள் எதுவும் இல்லாத காரணத்தினாலும் வாழை இலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வழக்கமாக 5000 ரூபாய் வரை விற்பனையாகும் 200 இலைகள் கொண்ட பெரிய வாழை இலை கட்டு ரூபாய் 1200 ரூபாய் முதல் 1300 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதேபோன்று ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான 200 இலை கொண்ட சிறிய வாழை இலை கட்டு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவ்வாறு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் வாழை இலை வெட்டுவதற்கான கூலியை கொடுப்பதற்கு கூட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வாழை இலை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வருகிற சித்திரை மற்றும் வைகாசி மாதம் சுப முகூர்த்த தினம் மற்றும் கோவில் திருவிழாக்கள் வரும் பொழுது வாழை இலை விலை உயரும் என எதிர்பாராத்து இருப்பதாக தெரிவித்தனர்.