குத்தாலம் அரசு நடுநிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா
வீடுகளில் தயாரித்த பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் அரசு நடுநிலைப்பள்ளியில், உணவு திருவிழா நடைபெற்றது. நாகை ஈகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டம் மூலமாக பாரம்பரிய உணவுத் திருவிழா நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லம்மாள் தலைமை வகித்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு, மாணவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து தயாரித்து வந்த பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர். இதில் வாழைப்பூ வடை, சிறுதானிய கஞ்சி, கம்பு தோசை, கருப்பு தானிய பால், செம்பருத்தி டீ, சிவப்பு அரிசி புட்டு, சிவப்பு அரிசி கொழுக்கட்டை, திணை பாயாசம், உளுந்து பணியாரம், பானகம், பிரண்டைத் துவையல், பனை ஓலை கொழுக்கட்டை, நீர் உருண்டை முதலிய பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, மாணவர்கள் சுவைப்பதற்கு வழங்கப்பட்டன. நெகிழி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை எவர்சில்வர் பாத்திரங்களில் எடுத்து வந்திருந்தனர். கண்காட்சியில், பாக்கு மட்டை தட்டு, கரும்பு சக்கை தட்டு, தாமரை இலை ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பள்ளியின் ஆசிரியர்கள் சுரேஷ்குமார் மற்றும் ஜாஸ்மின் ஆகியோர் பாரம்பரிய உணவுகளின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துக் கூறினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் காமராஜ், சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.