ஏட்டு கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
மதுரை உசிலம்பட்டி ஏட்டு கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி ஏட்டு முத்துக்குமார் என்பவர் கடந்த மார்ச் 27ம் தேதி அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே நடந்த தகராறில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி பொன்வண்ணனை மார்ச் 29 ல் தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் சுட்டு பிடித்தனர். மேலும் அவருடன் இருந்த சிவனேஸ்வரன், பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த நாவார்பட்டி பிரதாப்( 24) என்பவரை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் முருகராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.