மதுக்கரை: நகராட்சியில் ஊழல் - பொதுமக்கள் முற்றுகை !
மதுக்கரை நகராட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக, பாஜக மற்றும் பொதுமக்கள் நேற்று திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக, பாஜக மற்றும் பொதுமக்கள் நேற்று திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதன் தலைவராக திமுகவைச் சேர்ந்த நூர்ஜகான் நாசர் உள்ளார். நகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செலவு கணக்குகளை அதிக மதிப்பீட்டில் எழுதுவது, பணிகளுக்கான டெண்டர்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்குவது போன்ற முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபடுவதாக மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கட்டிட அனுமதிக்கு ரூ.50,000 லஞ்சம் கேட்பதாகவும், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் நகரை குப்பை மேடாக மாற்றுவதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும், இதேபோன்று ஊழல் சம்பவங்கள் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.