ஜாதி மாறி காதல் தங்கையை கொலை செய்த அண்ணன் பரபரப்பு
பல்லடம் அருகே 22 வயது கல்லூரி மாணவி வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் அண்ணனே கொலை செய்தது விசாரணையில் அம்பலம்.;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா. 22 வயதுடைய வித்யா கோவை அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வருகிறார். மூன்று வருடங்களாக இருவரும் காதலி தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெண்மணி வித்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்ததாகவும், பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர்கள் கோவிலுக்கு சென்ற நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வித்யாவின் மீது பீரோ விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மருத்துவ குழுவினர் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வை மேற்கொண்டனர். உடற்கூறு ஆய்வில் வித்யாவின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ச்சியாக வித்யாவின் தந்தை தாய் மற்றும் அவரது சகோதரன் சரவணன் என்பவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் தனது தங்கையை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி நான் தான் கொன்றேன் என உயிரிழந்த வித்யாவின் சகோதரன் சரவணன் வாக்கு மூலம் அளித்துள்ளார். மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் வித்யா கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ச்சியாக போலீசார் வித்யாவின் தாய் மற்றும் தந்தையிடமும் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.