காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.;

தென்காசி சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் செயல் அலுவலர் முருகனின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது என்றும் இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.நாள்தோறும் பணிகளை செய்தால் மட்டுமே ஏப்ரல் 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக பணிகளை முடிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதிப்பதோடு, தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.