தனியார் கல்லூரி மூலம் இலவசமாக கட்டி கொடுத்த சுகாதார வளாகத்தில் பணம் கொடுத்து உபயோகிக்கும் பக்தர்கள்..வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது என்று பொதுமக்கள் கேள்வி
தனியார் கல்லூரி மூலம் இலவசமாக கட்டி கொடுத்த சுகாதார வளாகத்தில் பணம் கொடுத்து உபயோகிக்கும் பக்தர்கள்..வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது என்று பொதுமக்கள் கேள்வி;

தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஆண்டாள் கோவிலில் இலவச சுகாதார வளாகம் இல்லாமல் பக்தர்கள் அவதி.. தனியார் கல்லூரி மூலம் இலவசமாக கட்டி கொடுத்த சுகாதார வளாகத்தில் பணம் கொடுத்து உபயோகிக்கும் பக்தர்கள்..வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது என்று பொதுமக்கள் கேள்வி.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ தளங்களில் ஒன்றாகும்.இங்கு தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்,மார்கழி மாத உற்சவம், ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.இந்த நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் சுற்றுலா தளமாக விளங்குவதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்களும் வருகை தந்து ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியான சுகாதார வளாக வசதி கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலவச சுகாதார வளாக வசதி இருந்த நிலையில் கட்டிடம் பழுதடைந்து சிதலம் அடைந்து பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதை அகற்றிவிட்டு புதிய சுகாதார வளாக கட்டிடம் கட்டாமல் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டாள் கோவில் நிர்வாகம் மெத்தன போக்கில் செயல்படுகிறது. மேலும் தனியார் கல்லூரி நிறுவனம் மூலம் ஆண்டாள் கோவில் முன் பகுதியில் இலவச சுகாதார வளாக கட்டிடம் கட்டி பொதுமக்கள் இலவச பயன்பாட்டிற்காக கோவில் நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டது. தற்போது அதில் நான்கு வருடங்களாக பக்தர்கள் உபயோகத்திற்கு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பணம் கோவில் நிர்வாகத்திற்கு செல்கிறதா? வசூல் செய்யப்படும் பணம் வேறு யாருக்காவது செல்கிறதா ?இதனால் தான் சுகாதார வளாக கட்டிடத்தை புதுப்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. மேலும் பணம் வசூல் செய்யப்படும் நபர்களிடம் கேட்டால் தங்களுக்கு கோவில் நிர்வாகத்திடம் இருந்து சம்பளம் வழங்குவதில்லை என்றும் அதனால் செயல் அலுவலர் வரும் பக்தர்களிடம் பணத்தை வசூலித்து கொள்ளுமாறு தெரிவித்ததாகவும் கூறுகின்றனர். ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் சொத்துகள் கோடிக்கணக்கில் இருக்கும்போது அதன் மூலம் வரும் வருமானங்கள் என்ன என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது எனவும் அடிப்படை வசதியான சுகாதார வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் இந்த விடியா திமுக அரசு உள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உடனடியாக ஸ்டாலின் அரசு உலகப் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச சுகாதார வளாக கட்டிடம் கட்டி தர வேண்டும், தனியார் கல்லூரி மூலம் கட்டிக் கொடுக்கப்பட்ட சுகாதார வளாகத்தில் பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும், ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.