பேராவூரணி பேரூராட்சியில் தரமற்ற முறையில் நீர்த்தேக்கத் தொட்டி பழுது பார்க்கும் பணி... சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
தரமற்ற பணிகள்;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதுபார்க்கும் பணிகள் தரமற்ற முறையில் ஒப்பந்தக்காரர்கள் மேற்கொள்வதால் தஞ்சை மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்து, முறையாக பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . பேராவூரணி பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் . பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக நாட்டாணிக்கோட்டை , பழைய பேராவூரணி , பொன்காடு உள்ளிட்ட பகுதிகளிலும், பேரூராட்சி அலுவலக வளாகத்திலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. 1991 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 4 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட பேரூராட்சி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை 15 ஆவது நிதிக்குழு மானியத்தில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் மற்றும் மோட்டார் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. மேல்நிலை தொட்டியில் பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில், அவைகளை கொத்தி சிமெண்ட் வைத்து பூசாமல், வெளியே தெரியும் கம்பிகளின் மேல் ஒப்பந்தக்காரர்கள் பெயிண்ட் அடித்து வருகின்றனர். வெளியே தெரியும் கம்பிகளை மூடாமல் மேலே பெயிண்ட் மட்டும் அடித்தால் சில ஆண்டுகளில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலை உள்ளதால் தஞ்சை ஆட்சியர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்து பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.10 லட்சம் ரூபாயை முறையாக செலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் நடைபெறும் இடத்திற்கு வியாழக்கிழமை சென்று பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் தரமற்ற பணிகள் குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் சத்தமிட்டதால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.