"இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம்" பட்டமேற்பு விழாவில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு 

பட்டமேற்பு விழா;

Update: 2025-04-06 02:40 GMT
"இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம்" பட்டமேற்பு விழாவில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு 
  • whatsapp icon
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமேற்பு விழா சனிக்கிழமை கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இளங்கலை மாணவ, மாணவிகள் 299 பேர், முதுகலை மாணவ, மாணவிகள் 17 பேர் என மொத்தம் 316 பேருக்கு  பட்டங்களை வழங்கி பேசியதாவது,  "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய், இன்றைக்கு நாங்களும் படிக்கிறோம். நாங்களும் வேலைக்கு செல்கிறோம் என்ற நிலை வந்திருக்கிறது. அதனை உற்சாகப்படுத்தக்கூடிய முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கின்றனர்.  பேராவூரணி அரசு கல்லூரியில் இளங்கலை படிப்பில் ஆண்களைவிட பெண்கள் 65 விழுக்காடு அதிகமாக படித்து வருகின்றனர். அதேபோல் முதுகலை பட்டப்படிப்பிலும் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் படித்து வருகிறார்கள். குடும்பத்தையே பல்கலைக்கழகமாக நடத்தும் பெண்களால், வாழ்விலும், சமுதாயத்திலும் வெற்றி மேல் வெற்றி குவிக்க முடியும் என்பதற்கு இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஒரு சான்றாக உள்ளது.  இந்த நிலை எப்படி வந்தது...? தொடக்கக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்த முயற்சியால், உயர்கல்வியில் தமிழ்நாடு 48 விழுக்காட்டை எட்டியுள்ளது இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக 243 பேர் பயின்று வருகின்றனர்.  தலைவரும், தளபதியும் எதற்காக உழைத்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது.  தமிழகத்திலே என்றைக்கும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம். இந்தியை திணிப்பதை ஏற்க மாட்டோம். அண்ணா வழி கட்டினார், கலைஞர் காப்பாற்றினார். தளபதி மு.க.ஸ்டாலின் கட்டிக் காக்கிறார். இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கு திதி தருவோம் என ஒன்றிய அரசு நம்மை அச்சுறுத்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மண்டியிட மாட்டோம். இந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவுபடுத்தி விட்டார்.  2500 கோடி ரூபாயை மாநில நிதியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு தந்து, ஒன்றிய அரசு உதவாத நிலையிலும், நிதி ஒதுக்கிய ஒப்பற்ற ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றைக்கு தமிழகத்திலே கடைக்கோடியில் இருக்கிற குப்பனும், சுப்பனும் பி.இ,  எம்.இ, என்று தங்கள் பெயருக்கு பின்னால் பட்டங்களை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கட்டிக் காக்கிற தளபதி மு.க.ஸ்டாலின் தான்...  நீங்கள் பெற்ற உங்கள் கல்வியை, நாட்டுக்கும், வீட்டிற்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஒரு தேசம் முன்னேறும், ஒன்றிய அரசு நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது கிராமப்புற மக்களின் கல்வியை அழிக்கும் செயலாகும்...  கலைஞர் ரத்து செய்த நுழைவுத் தேர்வை மீண்டும் ஒன்றிய அரசு கொண்டுவர துடிக்கிறது. உங்களுடைய கல்வி வீட்டிற்கும், நாட்டுக்கும் பயன்படக்கூடியதாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.  ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது, திராவிட இயக்கம், நீதிக்கட்சி... இன்றைக்கு பல ஆயிரக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான்...  இன்றைக்கு ஒன்றிய அரசு தமிழக கல்வித்துறையில் இடர்பாட்டை ஏற்படுத்தினாலும், தமிழ்நாடு அரசு அந்த இடர்பாட்டை போக்கி, கல்வியை காப்பாற்றும்.... அன்பு குழந்தைகளே நீங்கள் படியுங்கள்.... படியுங்கள்... படியுங்கள்... அதற்கு எந்தத் தடை வந்தாலும் உங்களுக்கான கல்வியை தருவேன் என்று சொல்பவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" இவ்வாறு பேசினார்.  விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.அசோக்குமார் (பேராவூரணி), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் ரோசி, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News