ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ஈரோடு சூளை அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது 1750 கிலோ அரிசி பறிமுதல்;
ஈரோடு மாவட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் மேனகா, ஈரோடு மாவட்டம் பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஈரோடு, சூளை, ரோஜா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ வீதம் 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து வேனை ஓட்டி வந்த கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (27) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை ஈரோடு டவுன் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாக கூறினார்.இதை அடுத்து தினேஷ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன், 1750 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் தினேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.