கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது;
அரியலூர்,ஏப்.6- அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சியில் மிகவும் பிரசித்திப் பெற்ற கலியுக வரதராசப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அரியலூர மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தததும், பரிசித்திப் பெற்ற கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் ராம நவமி அன்று தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டுக்கான பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கலியுக வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு,கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அர்ச்சகர்கள் ஏற்றினர்.இந்த பத்து நாள்களிலும், பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாள்தோறும் சமய சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள், நாதஸ்வர நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஏப்.12 ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்.14 ஆம் தேதியும், ஏகாந்த சேவை நிகழ்வு ஏப்.15 ஆம் தேதியும், ஏப்.16 ஆம் தேதி மஞ்சள் நீர்பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் விழா நிறைவுடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்காள் கமலா ராமச்சந்திரா படையாச்சி, கோ.ராமதாஸ் படையாச்சி, கோ.வெங்கடாஜலபதி படையாச்சி குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்த விழாவுக்கு நாள் தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால் திருச்சி, அரியலூரில் இருந்து நாள் தோறும் கல்லங்குறிச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. :