
நகராட்சியாக இருந்த திண்டுக்கல் கடந்த 2014 பிப்ரவரி 19ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள பள்ளப்பட்டி, குரும்பப்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, சீலப்பாடி, முள்ளிப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, பால கிருஷ்ணாபுரம், பிள்ளையார்நத்தம், பொன்மாந்துரை புதுப்பட்டி ஆகிய 10 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்ட நிலையில், 10 ஊராட்சிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் ஊராட்சிகளை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 5 ஆண்டுகள் முடிவில் திருத்தப்பட்ட இணைப்பு ஊராட்சிகள் கடந்த ஜனவரி 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பிள்ளையார்நத்தம், பொன்மாந்துரை புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகள் சேர்க்கப்படவில்லை. இதில் குரும்பப்பட்டி, பள்ளப்பட்டி, சீலப்பாடி பகுதிகளை முழுமையாக இணைக்கவும், தோட்டனூத்து, அடியனூத்து, செட்டிநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை பகுதியாக இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. முள்ளிப்பாடி கிராம ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை இணைப்பதை முற்றிலும் தவிர்க்கவும் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு இறுதி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு இதுவரை வரவில்லை.