ராமநாதபுரம் நூலகத்துக்கு சொந்த கட்டிடம் வாசகர்கள் கோரிக்கை
கமுதி நூலகத்திற்கு சொந்த கட்டடம்: வாசகர்கள் கோரிக்கை;
ராமநாதபுரம் மாவட்டம் :கமுதியில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள நூலக கட்டடம் போதுமான இடவசதி இல்லாமல் அரசு வழங்கும் புத்தகங்கள் அனைத்தும் மூட்டை கட்டி வைக்கப்பட்டு இட நெருக்கடியோடு கடந்த 35 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கமுதி நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வாசகர்கள் பொதுமக்கள் மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கமுதி கண்ணார்பட்டியில் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி அருகே பொதுநூலகத்துறைக்கு நிலமாற்றம் செய்து, 7 சென்ட் இடம் ஒதுக்கி மார்ச் மாதம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் கட்டடம் கட்டப்படாததால் மாணவர்கள் தொடர்ந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் கமுதி வாசகர் வட்டம் சார்பில் பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள், வாசகர்கள் நலன்கருதி தொகுதி அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நூலக கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சொந்த கட்டடப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.