கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடம் குண்டம் திருவிழா கடந்த மாதம் 11 ஆம் தேதி சகுனம் கேட்டலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிசேக ஆராதனைகள் தினந்தோறும் நடைபெற்று வந்தது. கடந்த 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாதம் கடந்த 02 ஆம் தேதி புதன்கிழமை கிராம சாந்தி, கொடியேற்றமும், ஞாயிறு இரவு மஞ்சல் நீராடல், வசந்தம் பொங்கல் வைத்தல் விழாவும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நேற்று குண்டம் திறந்து பூ போடுதலும் பக்தர்கள் குண்டத்துக்கு கரும்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து குண்டம் பற்ற வைத்தல் நிகழ்வும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூகுண்டம் இறங்குதல் இன்று காலை 5.00 மணியளவில் தொடங்கியது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு படைக்கலம் எடுத்து வரப்பட்டது. திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், பெருந்துறை, செங்கப்பள்ளி, பவானி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முன்தினமே வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, பூ குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குதலை தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்து வீதி உலா நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து வருகிற 12 ஆம் தேதி மஞ்சள் நீர் தரிசனத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. விழாவையொட்டி கூடுதல் எஸ்.பி.க்கள் 2 பேர் தலைமையில், 3 டி.எஸ்.பி.,க்கள், 11ஆய்வாளர்கள், 32 உதவி ஆய்வாளர்கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை போலீசார், 200 ஊர்க்காவல் படையினர், 50 டிராபிக் வார்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 2 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 60 இடங்களில் மொபைல் டாய்லெட், 9 இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் குண்டம் இறங்குவதை பார்க்க 2 இடங்களில் எல்.இ.டி. திரை, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு, குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட குளியல் அறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெருமால்லூரில் இன்று இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.