உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணி
மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவர்களும், திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அரசு பள்ளி மாணவர்களும் இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்;

மதுரை மாவட்டம் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று குறிப்பிட்ட நாட்கள் அங்கு தங்கி அப்பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல செயல்முறை விளக்கங்கள் ஏற்படுத்தி வருவது வழக்கம். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த மதுரை வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவம் திட்டத்தின் கீழ் ரெட்டியார்சத்திரம் பகுதியில் தங்கி ரெட்டியார்சத்திரம் பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல செயல்முறை விளக்கங்களையும், பூச்சிகளை இயற்கை முறையில் எவ்வாறு விரட்டுவது என்பது குறித்தும் கற்றுத் தந்தனர். விவசாயிகளிடமிருந்தும் இந்த மாணவர்கள் பல செயல்முறை விளக்கங்களை கற்றுக்கொண்டனர். பின்னர் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே. புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி ஆகியவற்றை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் அப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தி மக்களுக்கு சுகாதாரம், உடல் நலம், உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்கள் கே.புதுக்கோட்டை அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.