ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசின் வக்ஃபுக்கு எதிரான திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்;

இந்தியாவிலேயே ராணுவம் மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக சொத்து மதிப்புகளை கொண்டது வக்பு வாரியம். இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு வக்பு வாரியத்தின் மீது புது சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தது. இதற்கு அனைத்து கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, வக்பு சொத்துக்களை பாகுபாடு காட்டுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுப்பதே இதன் நோக்கம் என மத்திய அரசு கூறி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 3ம் தேதி இந்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (08.04.25) திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் வகுப்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக ஒரு நாள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் மத்திய அரசு உடனடியாக வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னெடுப்போம் என்று திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முகமது அலியார், பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி, காஜாமைதீன், ஜோதி ராமலிங்கம், மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் முகமது ஹாரூன் ரஷீத், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், என பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வக்பு சட்ட திருத்த மசோதா என்பது அரசியலமைப்பு சட்டத்தின் மீதான இந்திய அரசின் தாக்குதல் என தமிழக முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின் வகுப்பு திருத்த சட்ட மசோதா குறித்து கூறியுள்ளார்.