சுக்கு நூறாகிய பேருந்தின் முன்பக்க கண்ணாடி
வேடசந்தூர் காக்காதோப்பூ அருகே வெயிலின் தாக்கம் தாங்காமல் உடைந்து சுக்கு நூறாகிய பேருந்தின் முன்பக்க கண்ணாடி - பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயம்;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பூர் அருகே கரூரில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ரங்கநாதன் என்பவர் ஓட்டினார். அன்புச்செல்வன் என்பவர் நடத்துனாராக இருந்தார். இந்த நிலையில் பேருந்து காக்கா தோப்பூர் தனியார் நூற்பாலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெயிலின் தாக்கம் தாங்காமல் பேருந்தின் முன்பக்க கண்ணாடி பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் ரங்கநாதன் காயங்களுடன் பேருந்தை கட்டுப்படுத்தி சாலை ஓரமாக நிறுத்தி 50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இதில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. பேருந்தின் கண்ணாடி உடைந்து உடலில் காயங்கள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக பேருந்தை கட்டுப்படுத்தி சாலை ஓரமாக நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுனருக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.