கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு: மருத்துவ குழுவினர் பரிசோதனை
உடல் நலக்குறைவு;
கரம்யம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, வழங்கிய அன்னதானத்தை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்க வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6 ஆம் தேதி இரவு, காப்புக்கட்டுதலுடன் சித்திரைத் திருவிழா துவங்கியது. இவ்விழாவில், பட்டுக்கோட்டை, பேராவூரணி, கறம்பக்குடி, மதுக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் மறுநாள் திங்கள்கிழமை காலை, கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில், மண்டகப்படிதாரர்கள் சார்பில், சைவ உணவு சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு, மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்கள், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லுாரி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கறம்பக்குடி அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி மருத்துமனையில் 30 பேரும், புதுக்கோட்டை மற்றும் கறம்பக்குடி மருத்துவமனையில் சுமார் 15 பேரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் குழுக்கள் செவ்வாய்க்கிழமை கரம்பயம் பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து, கிராம மக்களை பரிசோதனை செய்தனர். இது போல ஒவ்வொரு கிராமங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை, அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் கலைவாணி கூறியதாவது: கரம்பயம் கோவிலில், உணவு அல்லது தண்ணீரால் பாதிப்புகள் ஏற்பட்டதா என மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். இருப்பினும், சாப்பிட்ட நபர்களை கண்டறிந்து, மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.