பேராவூரணி பகுதியில், தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்த செயல்விளக்கம் 

வேளாண் செயல் விளக்கம்;

Update: 2025-04-09 05:40 GMT
  • whatsapp icon
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஆண்டிக்காடு கிராமத்தில் விவசாயி சுந்தர்ராஜன் என்பவரின் தென்னந்தோப்பில்,  தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பேராவூரணி தோட்டக்கலைத்துறை மற்றும் வேப்பங்குளம் தென்னை ஆராய்சி நிலையம் இணைந்து நடத்திய இம்முகாமில்,  வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.  இதில், தோட்டக்கலை உதவி இயக்குநர் வள்ளியம்மாள், துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் டாக்டர் குமணன், பூச்சியியல் விஞ்ஞானி டாக்டர் முத்துக்குமார், நோயியல் விஞ்ஞானி டாக்டர் சுருளிராஜன் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.  தீர்வுகள்  5 வயதுக்கு குறைவான தென்னை மரங்களில், மட்டையின் அடிப்புறம் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம். 5 அடி நீளம், 1.5 அடி அகலம் உள்ள மஞ்சள் நிற பாலிதீன் தாள்களில் இரு புறமும் ஒட்டும் பசை தடவி, ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில், இரு தென்னை மரங்களுக்கு இடையே, 6 அடி உயரத்தில் தொங்க விட வேண்டும். என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலைத்துண்டுகள் வீதம், 10 மரத்துக்கு 1 இலைத்துண்டு வீதம் உபயோகிக்கலாம். இலைகளின் மீது உள்ள கரும் பூஞ்சானத்தை நீக்குவதற்கு, 1 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் மைதா மாவை கரைத்து, இலைகளின் மீது நன்கு படும்படியாக தெளிக்க வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.  இதில், நூற்றுக்கணக்கான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர் அன்பரசன் செய்திருந்தார்.

Similar News